search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரப்பு பயிர் சாகுபடி.
    X
    வரப்பு பயிர் சாகுபடி.

    பூச்சிகளை தடுக்க வரப்புப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

    பல விவசாயிகள் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி நடைபெற்று வருகிறது. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருவது சேதம் விளைவிக்கும் பூச்சிகளாகும். இந்த பூச்சிகளை அழிப்பதற்கு அதிக அளவில் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

    ஆனால் இவ்வாறு பயன்படுத்தப்படும் ரசாயன மருந்துகளின் எச்சங்கள் காய்கறிகளில் தங்கி அதனை உண்ணும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நஞ்சில்லா உணவுகள் குறித்த விழிப்புணர்வும், தேடலும் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்வதில் விவசாயிகளும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

    பல விவசாயிகள் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அத்துடன் சேதம் விளைவிக்கும் பூச்சிகளைக் கவரக் கூடிய கவர்ச்சிப் பயிர்களை வேலிப் பயிராகவும், வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    இவ்வாறு பயிரிடப்படும் பயிர்கள் சேதம் விளைவிக்கும் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கின்றன. இதனால் பூச்சிகள் இந்த கவர்ச்சிப்பயிரிலேயே தங்கி விடுவதால் சாகுபடிப்பயிர் காப்பாற்றப்படுகிறது. உதாரணமாக பருத்தியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த வெண்டை, துவரை போன்றவற்றையும், நிலக்கடலையில் சிவப்புக் கம்பளிப் புழுக்களைக் கட்டுப்படுத்த தட்டைப் பயிரையும் கவர்ச்சிப் பயிராக பயன்படுத்துவதுண்டு. 

    அதுபோல தட்டைப்பயறு போன்ற பயிர்களை தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது அதில் உருவாகும் நன்மை தரும் பூச்சியினங்கள் வெள்ளை ஈக்கள் போன்ற தீங்கு தரும் பூச்சிகளை அழிக்கிறது. அந்த வகையில் மடத்துக்குளம் பகுதியில் பீட்ரூட் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரப்புப் பயிராக தட்டைப்பயறு சாகுபடி செய்துள்ளனர். 

    இது பெருமளவு பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் கவர்ச்சிப்பயிராக செயல்பட்டு பிரதான பயிரைக் காப்பாற்றுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×