search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வசீம் அக்ரம்- கொலை நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.
    X
    வசீம் அக்ரம்- கொலை நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.

    மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொலை- காரில் வந்த 6 பேர் கும்பல் வெறிச்செயல்

    படுகொலை செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம்அக்ரம் (வயது 43).வாணியம்பாடி முன்னாள் நகரசபை உறுப்பினரான இவர், மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி) மாநில துணை செயலாளராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர், நேற்று தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்

    அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் திடீரென காரில் இருந்து இறங்கி வசீம் அக்ரமை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் காரில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசீம் அக்ரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். போலீசார், பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை கண்டித்து அவர்கள் வாணியம்பாடி- வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    படுகொலை செய்யப்பட்ட வசீம்அக்ரம் உடல் வேலூரில் இருந்து மீண்டும் கொண்டு வந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து 1 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து வாணியம்பாடியில் பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

    படுகொலை செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட வசீம் அக்ரத்துக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வகுமார் ஆகியோர் உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு 3 தனிப்படை அமைத்து அனைத்து மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடி மற்றும் குறுகிய சாலைகளில் போலீசாரை சோதனையில் ஈடுபடுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி சத்திரம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். அதில் இருந்த 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி, அறிஞர் அண்ணா காலனியைச் சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி மற்றும் முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லிகுமார் என்பதும், வாணியம்பாடியில் நடந்த வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது. தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×