search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்த காட்சி.
    X
    சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்த காட்சி.

    பெண்ணிடம் ரூ.11 லட்சம் பறித்து சென்ற கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்

    பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென தேன்மொழி கையில் இருந்த பணப்பையை பறித்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூரை அடுத்த முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 45). தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். 

    சம்பவத்தன்று இவர் இடம் கிரையம் செய்வதற்காக நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தனது மனைவி தேன்மொழியுடன் (36) ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தை பையில் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடத்தை கிரையம் செய்ய முடியாததால் இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் கேத்தம்பாளையம் அருகே வந்தபோது அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென தேன்மொழி கையில் இருந்த பணப்பையை பறித்தார். 

    இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி திருடன், திருடன் என்று கூச்சல் போடவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அந்த வாலிபர் பணப்பையுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மகேந்திரன், அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தேன்மொழியிடம் இருந்து பணப்பையை பறித்துச் சென்ற வாலிபர் அந்தப் பையை மோட்டார்சைக்கிளின் முன்புறம் வைத்துக்கொண்டு கேத்தம்பாளையம் வழியாக சென்றது பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவுபடி குற்றப்பிரிவு துணை கமிஷனர் ரவி நேரடி மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சி.சி.டி.வி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். 
    Next Story
    ×