search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ரமேஷ்
    X
    கைதான ரமேஷ்

    குடிக்க பணம் தராததால் தாயின் கழுத்தில் மிதித்து கொன்றேன் - கைதான மகன் வாக்குமூலம்

    மதுரையில் குடிக்க பணம் தராததால் பெற்ற தாயையே மகன் கழுத்தில் மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் எழுமலையை அடுத்த கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). மது போதைக்கு அடிமையான இவர், அடிக்கடி வீட்டில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

    நேற்றும் ரமேஷ் பணம் கேட்டு தாய் பெரியமாயி (70)யிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த ரமேஷ், தாய் கழுத்தில் காலால் மிதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே பெரியமாயி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது ரமேஷ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் குடிநீர் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்க்கிறேன். என் தந்தை மொக்கராஜ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே நான் தாயார் பெரியமாயியுடன் வசித்து வருகிறேன்.

    எனக்கு காக்கா வலிப்பு நோய் உள்ளது. இதற்காக மருத்துவம் பார்த்து வருகிறேன். எனக்கு சகோதரிகள் செல்வி, மகேஸ்வரி, சகோதரர் சுரேஷ் ஆகிய 3 பேர் உள்ளனர்.

    நான்தான் குடும்பத்தில் மூத்தவன். ஆனால் என்னை தவிர குடும்பத்தில் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    நான் தாயாரிடம் கேட்டபோது “உனக்கு காக்காவலிப்பு பிரச்சினை உள்ளது. எனவே உனக்கு பெண் கொடுக்க எவரும் முன்வரவில்லை” என்று காரணம் கூறி வந்தார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே நான் குடிப்பழக்கத்துக்கு ஆளானேன்.

    என் தாய்க்கு மாதந்தோறும் முதியோர் பென்சன் வரும். அந்தத் தொகையை அவர் மகள்களுக்கு தேவைப்படும் போது எல்லாம் கொடுத்து வந்தார். நான் அவரை 15 ஆண்டுகளாக பராமரித்து வருகிறேன். ஆனால் அவர் எனக்கு ஒரு பைசாகூட கொடுத்து உதவியது இல்லை.

    நான் நேற்று பணி முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்பினேன். அப்போது வீட்டில் அம்மா இருந்தார். எனக்கு 15-ந் தேதிக்கு மேல்தான் சம்பளம் வரும். எனவே “100 ரூபாய் தாருங்கள், சம்பளம் வந்ததும் திருப்பித் தந்து விடுகிறேன்” என்று கேட்டேன். அதற்கு அம்மா மறுத்து விட்டார். எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    “மற்ற பிள்ளைகளுக்கு எல்லாம் காசு கொடுத்து உதவி செய்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் ஏன் பணம் தர மறுக்கிறீர்கள்? என்று கேட்டேன். அப்போது அவர் “நானே முதியோர் பென்‌ஷன் வாங்கி காலம் கழித்து வருகிறேன். இந்தப் பணத்தை வாங்கி குடிக்க வேண்டும் என்று நினைக்காதே” என்று அறிவுரை கூறினார்.

    இதனால் எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. “எனக்கு அறிவுரை கூற உனக்கு தகுதி இல்லை” என்றேன். அவரும் என்னை எதிர்த்துப் பேசினார். எனவே அவரை பிடித்து கீழே தள்ளினேன். அப்போது அவர் சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார். உடனே கோபத்தில் ஓங்கி மிதித்தேன். அது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் பட்டு விட்டது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்து இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×