search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களையும் , பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களையும் , பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் படத்தில் காணலாம்.

    திருப்பூரில் தொழிலதிபர் மகன் கடத்தப்பட்ட விவகாரம்-ரூ.1கோடி பணத்துடன் தலைமறைவான மேலும் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

    சம்பவம் நடந்த பகுதி, பணம் கொடுத்த இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் காடையூரில் அரிசி ஆலை, திருமண மண்டப ங்கள் வைத்துள்ளார். இவரது மகன் சிவபிரதீப் (22) என்பவரை நேற்று முன்தினம் மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.

    மேலும் ஈஸ்வரமூர்த்தியை தொடர்பு கொண்ட அவர்கள், சிவபிரதீப்பை விடுவிக்க வேண்டும் என்றால் தங்களுக்கு ரூ.3 கோடி பணம் வேண்டும். போலீசில் புகார் எதுவும் கொடுக்கக்கூடாது. புகார் செய்தால் சிவ பிரதீப்பை துண்டு துண்டாக வெட்டிக்கொன்று விடுவோம் என்று மிரட்டியதுடன், பணத்துடன் திண்டுக்கல்லுக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரமூர்த்தி ரூ.3 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் சென்றார். அங்கு கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து விட்டு மகனை மீட்டு வந்தார். இதையடுத்து  காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் மேற்கு மண்டல ஐ.ஜி.,சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி ஆகியோரது மேற்பார்வையில் எஸ்.பி.சசாங்சாய் உத்தரவின் பேரில் காங்கயம் டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் கடத்தலில் ஈடுபட்ட சக்திவேல் (37), அகஸ்டின் (45), பாலாஜி (38) ஆகியோர் மதுரையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    மற்றொரு நபரான பஷீர் (32),சையத் அகமதுல்லா ஆகியோரை கிருஷ்ணகிரியில்வைத்து கைது செய்தனர். கைதான 5 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 89 லட்சத்து 94ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சக்திவேல், பாலாஜி ஆகியோர் ஈஸ்வர மூர்த்தியின் அரிசி ஆலையில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி உள்ளனர். 

    ஈஸ்வரமூர்த்தியிடம் பணப்புழக்கம் இருப்பதை அறிந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து சிவபிரதீப்பை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக  ஆங்கிலபடங்களின் காட்சிகளையும்  ஒத்திகை பார்த்து சிவபிரதீப்பை கடத்தியுள்ளனர். ஆனால்  போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய  மதுரையை சேர்ந்த  பாலன், நத்தம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் ஆகிய 2 பேர் ரூ.1கோடி பணத்துடன் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் கூறும் போது, சம்பவம் நடந்த பகுதி, பணம் கொடுத்த இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடித்ததாக தெரிவித்தார். புகார் கொடுத்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை ஐ.ஜி., சுதாகர் மற்றும் போலீஸ் உயர்அதிகாரிகள் பாராட்டினர். 
    Next Story
    ×