search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உப்பாறு அணைக்கு தண்ணீர் வர நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

    காங்கேயம், வெள்ளகோவில் பி.ஏ.பி. கடைமடை பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு 7 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு, 7 நாட்கள் அடைப்பு என்ற முறையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலிக்காட்சி மூலமாக நடைபெற்றது.  கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தந்த வட்டார வேளாண்மை அலுலகத்தில் விவசாயிகள் காணொலிக்காட்சி மூலமாக இணைந்து மனுக்களை அளித்தனர். 

    முந்தைய கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும், மனுக்கள் மீது காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 84 மனுக்கள் அளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு உயிர்த்தண்ணீர் வழங்க வேண்டும். பி.ஏ.பி. நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்கிறது. தற்போது 4-வது மண்டலத்துக்கு தண்ணீர் திறப்பு நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஒரு நிரந்தர தீர்வாக அரசூர் ஷட்டரில் இருந்து உப்பாறு அணை வரை குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 

    அமராவதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து உபரிநீர் திறக்கும் போது அவை வீணாக ஆற்றில் கலக்கிறது. நாட்டுக்கல்பாளையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் வெட்டினால் உப்பாறு அணைக்கு தண்ணீர் கிடைக்கும். உப்பாறு அணைக்கு நீர் வர ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

    காங்கேயம், வெள்ளகோவில் பி.ஏ.பி. கடைமடை பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு 7 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு, 7 நாட்கள் அடைப்பு என்ற முறையில் தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

    7 நாட்கள் தண்ணீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும். தாராபுரம், மூலனூர், குண்டடம் ஒன்றிய பகுதியில் மும்முனை மின்சாரம் நாளன்றுக்கு 1 மணி நேரத்துக்கு மேலாக தடைபட்டு வருகிறது. இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×