search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இம்மாத இறுதியில் திருப்பூருக்கு அனைத்து தொழிலாளர்களும் திரும்ப வாய்ப்பு

    தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் பெறப்பட்டு ரெயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
    திருப்பூர்:

    பனியன் உற்பத்தி தொழில் வளர்ச்சியால் திருப்பூர் நாட்டின் அதிக வேலை வாய்ப்பு வழங்கும் நகராக மாறியுள்ளது. வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். கொரோனா இரண்டாவது அலை மற்றும் ஊரடங்கால், கடந்த மே மாதம் ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேறி சொந்த ஊர் சென்று விட்டனர். தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது, வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் வருகை அதிகரிப்பால் திருப்பூர் பின்னலாடை துறையின் இயக்கம் மீண்டும் வேகமெடுத்துள்ளது.

    இதுகுறித்த தகவல் அறிந்து வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் கடந்த ஜூன் மாத இறுதி முதலே திருப்பூர் திரும்ப துவங்கி விட்டனர்.தற்போது தொழிலாளர் வருகை மேலும் அதிகரித்துள்ளது. ரெயில் மூலம் தினமும் ஆயிரக்கணக்கில் வடமாநில ஆண், பெண் தொழிலாளர்கள் திருப்பூர் வந்து கொண்டிருக்கின்றனர். 

    தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் பெறப்பட்டு ரெயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஊரடங்கால் இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இழந்து வருவாய் இன்றி தொழிலாளர்கள் தவித்தனர். வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்வி கட்டணம், வங்கி கடன் திருப்பிச் செலுத்துதல், அன்றாட செலவினங்களை எதிர்கொள்ள உடனடியாக பணியில் இணையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இம்மாத இறுதிக்குள் அனைத்து தொழிலாளரும் திருப்பூர் திரும்பி விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் வருகை பின்னலாடை துறையின் இயக்கத்தை நாளுக்கு நாள் வேகப்படுத்தி வருகிறது.

    கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் பரவலாகியுள்ளது. மீண்டும் ஒரு பெருந்தொற்று ஏற்பட்டு, தொழிலும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் பின்னலாடை துறையினர் கவனமாக செயல்படுகின்றனர். அருகாமை அரசு மருத்துவமனைகள் உதவியுடன் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் தொகை செலுத்தி பெற்றும் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்துவதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தொழிலாளர்களின் அயராத உழைப்பும், தொழில்முனைவோரின் அர்ப்பணிப்பு உணர்வும் பின்னலாடை துறையை நிச்சயம் வெற்றிப்பாதையில் பயணிக்கசெய்யும் என்பது உறுதியாக தெரிகிறது.
    Next Story
    ×