search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கண்டெய்னர் தட்டுப்பாட்டால் திருப்பூரில் ஆடைகள் தேக்கம்

    தட்டுப்பாடு காரணமாக கண்டெய்னருக்கான கட்டணமும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா தடுப்பு ஊரடங்கு தளர்வையடுத்து திருப்பூரில் பனியன்  நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. மேலும் வெளிநாடுகளில் இருந்து பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

    இதையடுத்து ஆடைகளை தயாரித்து அனுப்புவதில் உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகள் சரக்கு ரெயில் மற்றும் லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. 

    ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆடைகள் கண்டெய்னர் தட்டுப்பாட்டால் அனுப்ப முடியாமல் திருப்பூர் நிறுவனங்களில் தேக்கமடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். 

    எனவே கண்டெய்னர்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க (டீ சங்கம்) தலைவர் ராஜாசண்முகம், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால்-க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கண்டெய்னர் தட்டுப்பாட்டால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கண்டெய்னருக்காக உற்பத்தி செய்த ஆடைகளை அதிக நாட்கள் இருப்பு வைக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. குறித்த நேரத்துக்குள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவதில்லை. 

    தட்டுப்பாடு காரணமாக கண்டெய்னருக்கான கட்டணமும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. விமானத்தில் ஆடைகளை அனுப்பும் போது செலவினம் இரட்டிப்பாகிறது. கொரோனாவால் தொழிலாளர் பற்றாக்குறை, சரக்குகளை கையாளுவதில் ஏற்படும் தாமதங்களே கண்டெய்னர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணங்கள்.

    அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆடை உற்பத்திக்கான ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஆர்.ஓ.எஸ். சி.டி.எல்., சலுகை காலத்தை நீட்டித்திருப்பது மேலும் ஊக்கம் அளிக்கிறது. ஆனால் கண்டெய்னர் தட்டுப்பாடு ஏற்றுமதிக்கு பெரிய தடைக்கல்லாக மாறி வருகிறது. மத்திய அரசு, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு போதுமான அளவு கண்டெய்னர் கிடைக்க செய்ய போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×