search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் மு.க. ஸ்டாலின்
    X
    முதல்வர் மு.க. ஸ்டாலின்

    மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய அரசிடம், அனைத்து கட்சி உறுப்பினர்கள் மூலம் நேரில் சென்று வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நெல் உற்பத்தி குறையும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையை தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால், எடியூரப்பா தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

    மேகதாது பிரச்சினை குறித்து கலந்து ஆலோசிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

    அதன்படி இன்று காலை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துகட்சி கூட்டம் தொடங்கியது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன் உடன் பங்கேற்றார். அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், பா.ம.க.சார்பில் ஜி.கே.மணி, பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

    ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன்

    தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., நாகை மாலி (மார்க்.கம்யூ), ராமச்சந்திரன் (இந்திய கம்யூ) ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி) வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் தமிழக அரசால் எடுக்கப்படும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தன.

    அதன்பின் கீழ்கண்ட மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    1. மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

    2. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கும்

    3. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் மத்திய அரசிடம் நேரில் வழங்கப்படும்
    Next Story
    ×