search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் தடுப்பூசி முகாம்கள் இன்று ரத்து

    தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 60 லட்சத்து 84 ஆயிரத்து 347 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 945 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொரோனா 2-வது அலை தாக்கத்திற்கு பின்னர் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆனால் போதுமான அளவுக்கு மத்திய அரசு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யாததால் முகாம்கள் மூடப்படுகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

    சென்னையிலும் 3 நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறைந்த அளவில் இருந்த தடுப்பூசிகள் மையங்களுக்கு வினியோகிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

    சென்னையில் 64 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்து பொதுமக்கள் காத்து நிற்காமல் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

    தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முகாம்களுக்கு தடுப்பூசி போட நேரில் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

    மத்திய அரசு வருகிற 11-ந்தேதி தான் அடுத்தகட்டமாக தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதனால் தற்போது தமிழகம் முழுவதும் தட்டுப்பாட்டின் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    இந்த நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் மத்திய மந்திரி சபை மாற்றத்தால் அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு முகாமிட்டுள்ள அவர், இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் இணைச் செயலாளர்களை சந்தித்து பேசுகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து விவாதிக்கிறார்.

    மேலும் தடுப்பூசி வினியோகிக்கக் கூடிய அதிகாரிகளையும் அவர் சந்தித்து கூடுதலாக தடுப்பூசிகளை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நிதி அயோக் உறுப்பினர்களையும் அவர் சந்திக்கிறார்.

    தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 60 லட்சத்து 84 ஆயிரத்து 347 பேருக்கு   தடுப்பூசி   செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 945 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


    இதையும் படியுங்கள்... முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

    Next Story
    ×