search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 594 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    நேற்று 2 ஆயிரத்து 535 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 4 ஆயிரத்து 594 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 76.41 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 75.71 அடியானது. நீர் மட்டம் குறைந்ததால் தற்போது மேட்டூர் அணையில் உள்ள கிறிஸ்தவ கோபுரம் வெளியே தெரிகிறது.

    மேட்டூர் அணை கட்டப்பட்டபோது நீர்த்தேக்க பகுதிகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்த மக்கள் அங்கிருந்து வேறு பகுதிகளில் குடி அமர்த்தப்பட்டனர். அந்த கிராம மக்கள் தங்களின் விளை நிலங்களை விட்டு வெளியேறினர். ஆலயங்களை சேதப்படுத்தினால் தெய்வ குற்றம் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் ஆலயங்களில் இருந்த விக்கிரகங்களை மட்டுமே தாங்கள் புதியதாக குடியமர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்று ஆலயங்களை கட்டி அங்கு வைத்து வழிபட்டனர்.

    அந்த மக்கள் விட்டுச் சென்ற ஆலயங்களில் பண்ணவாடி பரிசல்துறையில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலயம், 100 அடி உயரம் கொண்ட இரட்டை கோபுரங்களை கொண்ட கிறிஸ்தவ தேவாலயம் 100 மீட்டர் தூரத்தில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயம், கீரைக் காரனூர் பகுதியில் உள்ள சோளப்பாடி வீரபத்திரன் ஆலயம் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேலே சென்றால் அனைத்து ஆலயங்களும் நீரில் மூழ்கி விடும். அணையின் நீர் மட்டம் 80 அடிக்கு கீழே சரிந்தால் ஒவ்வொரு ஆலயமாக வெளியில் தெரியும். இந்த ஆலயங்கள் செங்கற்களாலும், சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டவை. இதனால் இன்றளவும் சிதையாமல் அப்படியே உள்ளன. பழங்கால கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் இவை உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலயத்தின் இரட்டை கோபுரங்களில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. தற்போது ஒற்றை கோபுரம் மட்டுமே உள்ளது.

    தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியாக சரிந்ததால் தேவாலயத்தின் கோபுரம் வெளியே தெரியத் தொடங்கியது. அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழே சரிந்ததும் கோபுரத்தின் மேல் பகுதி தெரிய வேண்டும். ஆனால் மேல் பகுதியில் இருந்த சில செங்கற்களை சிலர் பெயர்த்து எடுத்து சேதப்படுத்தியதால் தற்போது கோபுரம் வெளியே தெரிகிறது. இதனை பார்க்க மக்கள் வருவதால் வெறிச்சோடி காணப்பட்ட பண்ணவாடி பரிசல்துறை களை கட்டி உள்ளது. இதனால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×