search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    வேகமாக சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம்

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    குறுவை சாகுபடிக்கு வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பு ஆண்டில் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் பருவ மழையை எதிர்நோக்கி ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தொடக்கத்தில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த 26-ந் தேதி முதல் 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 674 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 1071 கன அடியானது. நீர் வரத்தை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த மாதம் 12-ந் தேதி 96.81 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 78.31 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 77.29 அடியானது. கடந்த 25 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 19.50 அடி சரிந்துள்ளது. தற்போது தினமும் 1.28 அடி என்ற அளவில் நீர்மட்டம் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர் இருப்பு 40.29 டி.எம்.சியாக உள்ளது. இதில் சுமார் 10 டி.எம்.சி. தண்ணீர் அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் தேவைக்காகவும் இருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

    எனவே மீதம் உள்ள 30 டி.எம்.சி. தண்ணீர் 30 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு போதுமானதாக இருக்கும். அதன் பிறகு பருவமழை கைகொடுத்தால் மட்டும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தாலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் அதிக அளவில் நீர் இருப்பு உள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. மழையின் காரணமாக பாசனத்திற்கான நீர் தேவை குறையும்.

    மேலும் கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்து 10 நாட்களில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×