search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

    இன்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலில் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி நெசவாளர் காலனியில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை சமேத மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் கோவிலில் பூசாரி மட்டுமே பூஜைகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பூசாரி பூஜைகளை முடித்து விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம கும்பல் கோவில் அருகே உள்ள வேப்பமரத்தில் ஏறி கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் கோவில் கருவறைக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து உள்ளனர். அதிலிருந்த அரை பவுன் அம்மன் தாலி மற்றும் ஒரு கிலோ எடை கொண்ட சுவாமிக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கிரீடம் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும்.

    இன்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலில் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை திறந்து பார்த்தபோது நகை மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். கோவிலில் மர்ம கும்பல் புகுந்து நகை வெள்ளிப்பொருட்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து தருமபுரி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கோவிலில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தருமபுரி நகரில் சிவன் கோவிலில் மர்ம கும்பல் புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×