search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்வராஜ் எம்.எல்.ஏ.,
    X
    செல்வராஜ் எம்.எல்.ஏ.,

    திருப்பூரில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு- செல்வராஜ் எம்.எல்.ஏ.,வலியுறுத்தல்

    பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். எனவே திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் சட்டமன்ற கூட்டத்தில் முதல்முறையாக பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-

    சட்டப்பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பளித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், திருப்பூர் தெற்கு தொகுதியில் என்னை வெற்றி பெற வாக்களித்த வாக்காளர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூர் குமரன் ரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கப்பட்ட சுரங்க பாதை திட்டம், திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு ரெயில்வே மேம்பாலப் பணி, திருப்பூர் காங்கேயம் ரோடு மணியக்காரம்பாளையம்- ஊத்துக்குளி ரோடு இணைக்கும் பாலப்பணி, காலேஜ் ரோடு-அணைப்பாளையம் மேம்பால பணி ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பின்னலாடை தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதனால் அவர்கள் பயன்பெறும் வகையில் இ.எஸ்.ஐ.மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    வஞ்சிப்பாளையம் முதல் காசிபாளையம் வரை 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு நொய்யல் ஆற்றின் மேல் பறக்கும் பாலம் அமைத்து ஆங்காங்கே உள்ளூர் வழித்தடங்களை  இணைத்து இணைப்பு பாலங்கள், சில இடங்களில் இடத்திற்கு ஏற்றார் போல் சிறு, சிறு பூங்காக்கள் மற்றும் பாலத்தின் அடியில் ஆற்றின் நீரை சுத்திகரிப்பு செய்து வெளியிடுவதற்கான தொழில்நுட்பங்களை அமைத்தால் நகரம் அழகு பெறும். போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, சிங்கார சென்னை போல அழகான திருப்பூர் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

    திருப்பூர் டவுன் ஈஸ்வரன் கோவிலில் இருந்து யூனியன் மில் ரோடு இணைக்கும் பாலம் பழுதடைந்து உள்ளது. அதனை மேம்பாலமாக அமைக்க வேண்டும். ஆர்.வி. லே-அவுட், சூசையாபுரம், டி .எம். சி. காலனி, கே.வி.ஆர். நகர், மண்ணரை ஆதிதிராவிடர் காலனி போன்ற தெற்கு தொகுதிக்குட்பட்ட குடிசைப்பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

    மாநகராட்சியின் 60 வார்டுகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளதால், வார்டுகளை முறைப்படுத்தி 72 வார்டுகளாக பிரித்து தர வேண்டும். 4-வது குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    மாநகராட்சியில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்கள், சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதுடன், துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×