search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கல்குவாரியால் ஆபத்து-பொதுமக்கள் பரபரப்பு புகார்

    கல்குவாரியில் அரசு அனுமதிக்கு புறம்பாக 200 அடிக்கு மேல் கூடுதலாக நிலம் தோண்டப்பட்டுள்ளது.
    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட வேடப்பட்டி கிராமத்தில் விளைநிலங்களுக்கு மத்தியில் கடந்த 20 ஆண்டுகளாக கல்குவாரி இயங்குகிறது. இந்த கல்குவாரியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

    மேலும் இது தொடர்பாக மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    கல்குவாரியில் அரசு அனுமதிக்கு புறம்பாக 200 அடிக்கு மேல் கூடுதலாக நிலம் தோண்டப்பட்டுள்ளது.இங்கு பயன்படுத்தப்படும் அனுமதிக்கப்படாத வெடிமருந்துகளால் வீட்டுச்சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விளைநிலங்கள் முழுவதும் வெடிமருந்து துகள்கள், பாறைதுகள்கள் பரவிக்கிடப்பதால் பயிர்கள் முளைப்பதில்லை.ஊருக்கு மிக அருகில் ராட்சத பள்ளம் தோண்டி உள்ளதால் கிராமபகுதியிலுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.கால்நடைகள் இந்த பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட முடியவில்லை. இரவு நேரம் தூங்க முடியாமல் குழந்தைகள், முதியவர்கள் மன உளைச்சலால் தவிக்கின்றனர். குவாரிக்கு இயக்கப்படும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் சாலையில் பயணிக்க அச்சமாக உள்ளது. சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது.

    இந்த குவாரியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து தாசில்தார், கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.பொதுமக்களை பாதிக்கும் வகையில் அரசு விதிக்கு புறம்பாக நடக்கும் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×