search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்- ரெயில்வே துறைக்கு கோரிக்கை

    மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணிக்க தடை நீடித்து வருவதால், பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பஸ், மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டன.

    புறநகர் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு, அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    4 மாவட்டங்களுக்கு இடையே 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் மின்சார ரெயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

    இதனால் புறநகரில் இருந்து சென்னை வந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். திருவள்ளூர், திருத்தணி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளை சேர்ந்த பயணிகள் தற்போது தங்கள் அலுவலகங்களுக்கு செல்ல பஸ் அல்லது இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    திருத்தணி-சென்னை இடையே மின்சார ரெயில் சேவை இல்லாததால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் கட்டுமான தொழிலாளர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணிக்க தடை நீடித்து வருவதால், பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர் மற்றும் வண்டலூரில் இருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களும் நிரம்பி செல்கின்றன.

    தனியார் நிறுவன ஊழியர்கள் வேலைக்கு வர அழைக்கப்பட்டதால், பஸ்களில் நெரிசலுடன் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 379-ல் இருந்து 470 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக ரெயில்களை இயக்கி உள்ளோம்.

    பொதுமக்களை மின்சார ரெயில்களில் அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×