search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பின்னலாடை துறை செயல்பாடு குறித்த ஆலோசனை - நாளை நடக்கிறது

    கொரோனாவுக்குப்பின் திருப்பூரில் கடனுக்கு மூலப்பொருட்கள், ஜாப்ஒர்க் வழங்கும் பழக்கம் படிப்படியாக மறைந்து வருகிறது.
    திருப்பூர்:

    புதிய நடைமுறைகளுக்கு ஏற்ப, பின்னலாடை நிறுவனங்கள், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்‘ என, ஆர்பிட்ரேஷன் கவுன்சில் அறிவுறுத்துகிறது.நிட்டிங், டையிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, ஆடை தயாரிப்பு என பல்வேறுவகை ஜாப்ஒர்க் நிறுவனங்களை அங்கமாக கொண்டு திருப்பூர் பின்னலாடை துறை இயங்குகிறது.ஏற்றுமதி, உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஆடை தயாரிப்பை பூர்த்தி செய்ய ஜாப்ஒர்க் நிறுவனங்கள் கைகொடுக்கின்றன.தயாரித்து அனுப்பும் ஆடைக்கான தொகையை வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகர் வழங்கியபின்னரே ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கான கட்டணத்தை ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வழங்குகின்றன.

    ஜாப்ஒர்க் துறையினர் தாங்களாகவே முன்வந்து ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு 60 முதல் 90 நாட்கள் கடனுக்கு சேவைகளை வழங்கின.கடந்த 2020ல் பரவிய கொரோனாவால் திருப்பூரில் பின்னலாடை துறை பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் நிதி நிலை மோசமடைந்ததால் நடைமுறை மூலதனமின்றி அடுத்தடுத்த ஆர்டர்களை கையாள்வது சிக்கலாகிறது. 

    இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் கடனுக்கு மூலப்பொருள், ஜாப்ஒர்க் சேவை அளிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளன. உடனடிதொகை வழங்கும் நடைமுறையை பின்பற்ற துவங்கியுள்ளன.ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தொகை செலுத்தி மூலப்பொருள் கொள்முதல் செய்வது, ஜாப்ஒர்க் கட்டணங்களை உடனுக்குடன் வழங்குவது போன்றவை கடைபிடிக்கப்படுகின்றன.

    இப்புதிய நெறிமுறைகளால் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உஷாராக செயல்பட வேண்டும் என ஆர்பிட்ரேசன் கவுன்சில் அறிவுறுத்துகிறது.இதுகுறித்து ஆர்பிட்ரேசன் தலைவர் கருணாநிதி கூறியதாவது:

    கொரோனாவுக்குப்பின் திருப்பூரில் கடனுக்கு மூலப்பொருட்கள், ஜாப்ஒர்க் வழங்கும் பழக்கம் படிப்படியாக மறைந்து வருகிறது. உடனடியாக தொகை வழங்கினால் மூலப்பொருள் அல்லது ஜாப்ஒர்க் சேவை கிடைக்கும் என்கிற வகையில் வர்த்தக நெறிமுறைகள் மாறியுள்ளன.கடந்த காலங்களில் தொகை வழங்க இழுத்தடிப்பதாக ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மீது ஜாப்ஒர்க், மூலப்பொருள் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து அதிக புகார்கள் கவுன்சிலுக்கு வந்தன.

    முன்னரே தொகை பெறும் நிறுவனங்கள் தரம் குறைபாடு போன்ற பிரச்சினைகள் எழும்போது முரண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் வரும் நாட்களில் மூலப்பொருள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மீது ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அதிக புகார் அளிக்கும் சூழல் உருவாகலாம்.ஆடை உற்பத்தி நிறுவனங்கள் நன்கு ஆராய்ந்து அதன்பின் மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். 

    ஜாப்ஒர்க் நிறுவனங்கள் வழங்கும் துணி, ஆடைகளை வழங்கும்போது தரம், நேர்த்தி என அனைத்தையும் பரிசோதித்து தொகைகளை வழங்க வேண்டும்.பொருட்கள் கொள்முதல், ஜாப்ஒர்க் கட்டணம் வழங்கல் சார்ந்த வரவு செலவுகளை கையாள்வதில் நிறுவன உரிமையாளர்கள் நேரடி கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் எதிர்காலங்களில் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஆர்பிட்ரேசன் கவுன்சிலின் நிர்வாக குழு கூட்டம் நாளை 22-ந் தேதி நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு சைமா சங்க அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள பின்னலாடை துறை சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் மாறியுள்ள புதிய நடைமுறைக்கு ஏற்ப பின்னலாடை துறையினர் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×