search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுபாட்டில்களை பதுக்கி ரூ.1000க்கு விற்கும் கும்பல்

    கள்ளச்சந்தை மதுபான விற்பனையை கட்டுப்படுத்த ‘டாஸ்மாக்‘ கடைக்காரர்களுக்கு கடிவாளம் போடுவது மட்டும் தான் ஒரே தீர்வு.
    அவிநாசி

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பல இடங்களில் அனுமதியின்றி மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுகிறது.அவை அவ்வப்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன.

    ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் மதுக்கடைகள் திறந்திருந்த நாட்களில் மதுபிரியர்கள் பலர் மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்து கொண்டனர். சிலர் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ. 120 முதல் ரூ.150  வரை விற்கப்படும் நிலையில் அவற்றை ரூ.500 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்கின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி., சஷாங் சாய், சட்ட விரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கள்ளச்சந்தை மதுபான விற்பனையை கட்டுப்படுத்த ‘டாஸ்மாக்‘ கடைக்காரர்களுக்கு கடிவாளம் போடுவது மட்டும் தான் ஒரே தீர்வு. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை விதிப்படி ஒருவர் அதிகபட்சம் 4.5 லிட்டர் மதுபானம் மட்டுமே வீடுகளில் வைத்துக்கொள்ள அனுமதியுண்டு.அதில் ஒரு பாட்டில் கூட வெளியில் விற்பனை செய்யக்கூடாது.அவ்வாறு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.ஆனால் ‘டாஸ்மாக்‘ மதுக்கடைக்காரர்கள் கடை விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் எத்தனை மதுபாட்டில்களை கேட்டாலும் விற்று விடுகின்றனர்.அரசுக்கு வருமானம் காண்பிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை.

    எனவே டாஸ்மாக் கடைகளில் ‘பில்லிங்’ முறையில் மதுபானங்களை விற்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கள்ளச்சந்தை விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். மேலும்கொரோனா பரவல் காரணமாக தற்போது திருப்பூர் மாவட்டத்தில்  டாஸ்மாக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் மதுவாங்கி  வருகின்றனர். 

     அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பலரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.  
    Next Story
    ×