search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள மருதம்பட்டி டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்களை காணலாம்
    X
    திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள மருதம்பட்டி டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்களை காணலாம்

    மாவட்ட எல்லைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்த சேலம், நாமக்கல் மதுப்பிரியர்கள்

    கடை திறந்த சுமார் 2 மணி நேரத்திலேயே அனைத்து மதுபான பாட்டில்களும் விற்பனையாகின. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காத சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதன்படி கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சேலம், நாமக்கல், கோவை உள்பட 11 மாவட்டங்களை தவிர தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. இதனால் அந்தந்த மாவட்ட மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆனால் சேலம் மாவட்டத்தில் உள்ள 220 டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்படாததால், மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சில மதுப்பிரியர்கள் சேலத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்ட எல்லைகளில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சேலத்தில் இருந்து மதுப்பிரியர்கள் அங்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தனர்.

    இதனிடையே நேற்று 2-வது நாளாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் எல்லையில் உள்ள மதுக்கடைகளில் குவிந்தனர். குறிப்பாக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உம்மியம்பட்டி, சனிசந்தை மற்றும் மானியதஅள்ளி ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு, மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்பட்டன. கூட்டம் அதிகமாக காணப்பட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

    இதே போல நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மருதம்பட்டியில் டாஸ்மாக் கடை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. இந்த கடை நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது. மருதம்பட்டியில் டாஸ்மாக் கடை திறப்பதை அறிந்த நாமக்கல் மாவட்ட மதுப்பிரியர்கள் அங்கு படையெடுத்தனர்.

    மதுப்பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கடை முன்பு தடுப்புகள் கட்டப்பட்டு இருந்தன. சரியாக காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை செய்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையை திறந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் ஒருவர் பின் ஒருவராக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். கடை திறந்த சுமார் 2 மணி நேரத்திலேயே அனைத்து மதுபான பாட்டில்களும் விற்பனையாகின. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காத சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இதனிடையே 2-வது நாளான நேற்றும் மருதம்பட்டி டாஸ்மாக் கடையில் நாமக்கல் மாவட்ட மதுப்பிரியர்கள் குவிந்தனர். முந்தைய நாள் மது கிடைக்காமல் விரக்தியில் திரும்பியதால், இந்த முறை கண்டிப்பாக மதுபாட்டில்களை வாங்கி தங்களது நீண்ட நாள் தாகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் காலை 6 மணிக்கே அவர்கள் கடையில் அலைமோதினர். இதனால் அங்கு பரபரப்பும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

    Next Story
    ×