search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிகுண்டு மிரட்டல்  விடுத்த வாலிபர்
    X
    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர்

    மதுரை, சென்னை ரெயில் நிலையங்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

    மதுரை, சென்னை ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கீழக்கரை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை:

    சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் ஒரு தகவல் வந்தது. அந்த தகவலில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க போகிறேன். மதுரை ரெயில் நிலையத்தையும் குண்டு வைத்து தகர்க்க போகிறேன் என குறிப்பிட்டிருந்தது.

    இது குறித்த தகவல் மதுரை ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு தடுப்புப்பிரிவினர் மதுரை ரெயில் நிலையம் மற்றும் ரெயில்நிலைய வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில் நிலையம் வந்தது. ரெயிலின் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்யப்பட்டது. பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவிகள் மற்றும் மோப்பநாய் மூலம் பரிசோதனை செய்யப்பட்டன. ரெயில் நிலைய வளாகம், ரெயில்வே பார்சல் அலுவலகம், ரெயில்வே தபால் சேவை அலுவலகம், ரெயில்வே முன்பதிவு மையம் ஆகியவற்றில் சோதனை செய்தனர். இதற்கிடையே, சென்னை போலீசாருக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பிய மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டன. விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புதுமாயாகுளம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தர்மராஜன் மகன் சரவண கார்த்திக் (வயது 32) என்பதும், அவர் பி.டெக் தகவல் தொழில்நுட்பம் படித்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு கருணாகரன் தலைமையில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முத்துமுனியசாமி மற்றும் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்க பெருமாள் உள்ளிட்டோர் சரவணகுமாரின் வீட்டுக்கு சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் 2015-ம் ஆண்டு முதல் மனநிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும், இதுபோன்று லேப்-டாப், செல்போன் ஆகியவற்றின் மூலம் பலருக்கு தகவல் அனுப்பி வந்ததும் தெரிந்தது. நன்றாக படித்து முடித்து பெரிய கம்பெனியில் வேலை பார்த்து வந்ததுடன் யூடியூப் சேனல் மூலம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து நன்றாக வாழ்ந்து வந்த சரவணகார்த்திக் திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டு இவ்வாறு மாறிபோனதாக கூறப்படுகிறது.

    இவரது லேப் டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை சோதனையிட்டு பார்த்தபோது தமிழக முதல்-அமைச்சரை கொலை செய்ய போகிறேன், பாலத்தினை தகர்க்கப்போகிறேன் என்பது போன்ற அதிர்ச்சி தகவல்களை ஆங்கிலத்தில் கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்து பலருக்கு அனுப்பி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை விசாரணைக்காக ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு போலீசார் விசாரிக்கும்போது எதுவும் தெரியாதவர் போல சரவண கார்த்திக் இருந்ததை கண்டு ரெயில்வே போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். இருப்பினும் அவரது பெற்றோரை போலீசார் எச்சரித்து விட்டு திரும்பினர்.
    Next Story
    ×