search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட கர்நாடக மாநில மதுபாட்டில்கள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கர்நாடக மாநில மதுபாட்டில்கள்

    கள்ளக்குறிச்சி அருகே செல்போன் மூலம் ஆர்டர் எடுத்து மதுபானம் விற்பனை - 2 பேர் கைது

    கள்ளக்குறிச்சி அருகே செல்போன் மூலம் ஆர்டர் எடுத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3,168 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே புதுஉச்சிமேடு கிராமத்தில் சிலர் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாகனங்கள் மூலம் மதுபாட்டில்களை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முருகேசன், வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை புதுஉச்சிமேடு கிராமத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு ஓட்டு வீட்டில் பெட்டி, பெட்டியாக கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்ததோடு, அங்கு தங்கியிருந்த அதேஊரை மாயவேல் மகன் ராஜ்குமார்(வயது 31), சோலைமுத்து மகன் செல்வம்(38) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதை பயன்படுத்தி ராஜ்குமாரும், செல்வமும் இப்பகுதி மதுபிரியர்களுக்கு செல்போன் மூலம் ஆர்டர் எடுத்து கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபான பாட்டில்களை வாகனங்களில் கடத்தி வந்து அதிக விலைக்கு பெட்டி, பெட்டியாக விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக இருவரும் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்திற்கு சென்று அங்குள்ள மதுபான கடைகளில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மதுபாட்டில்களை வாங்கி, அதனை மினிலாரியில் ஏற்றி புதுஉச்சிமேடுக்கு கடத்தி வந்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. கர்நாடகத்தில் 100 ரூபாய்க்கு வாங்கிய ஒரு மதுபாட்டிலை 200, 300 ரூபாய்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு 66 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கபட்டிருந்த 3,168 மதுபாட்டில்கள், 60 லிட்டர் சாராயம் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரி ஆகியவற்றை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடைய பறிமுதல் செய்யப்பட்ட கர்நாடக மாநில மதுபாட்டில்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நேரில் பார்வையிட்டதோடு, மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசாரை வெகுவாக பாராட்டினார்.
    Next Story
    ×