search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த ராணுவ வீரர் பூபதியின் உடலுக்கு தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது
    X
    இறந்த ராணுவ வீரர் பூபதியின் உடலுக்கு தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது

    ஜம்மு காஷ்மீரில் நடந்த விபத்தில் பாலக்கோடு ராணுவ வீரர் பலி - சொந்த ஊரில் உடல் அடக்கம்

    ஜம்மு காஷ்மீரில் நடந்த விபத்தில் பாலக்கோடு ராணுவ வீரர் பலியானார். அவருடைய உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் பூபதி (வயது 27). கடந்த 2015-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஏ.எஸ்.சி. (சூப்) படைப்பிரிவில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பூபதி, கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்து தனது தங்கையின் திருமணத்தில் பங்கேற்று விட்டு மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு பணிக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த வாகன விபத்தில் பூபதி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் தேசிய கொடி போர்த்தப்பட்டு சொந்த ஊரான கம்மாளப்பட்டிக்கு ராணுவ வாகனத்தின் மூலம் நேற்று காலை கொண்டு வரப்பட்டது. அப்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலுக்கு முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, இறந்த ராணுவ வீரரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., தர்மபுரி உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் மற்றும் ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பூபதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், 42 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பூபதியின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவருடைய உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் மீது போர்த்தியிருந்த தேசிய கொடியை ராணுவ அதிகாரிகள், பூபதியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இறந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விபத்தில் ராணுவ வீரர் பலியான சம்பவம் கம்மாளப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×