search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் - முன்பதிவு மட்டும் நடைபெறும் என அறிவிப்பு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிதாக யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறப்பு முகாம்களில் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் மருத்துவ துறையினர், சுகாதாரத்துறையினர், போலீசார், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், ஏப்ரல் மாதம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் போடப்பட்டது. இதைெதாடர்ந்து மே மாதம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி முடிவடையும் தருவாயில் இருந்த நிலையில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 4 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்திற்கு 4 ஆயிரத்து 500 வந்தது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் போடப்பட்டு விட்டது. தற்போது மாவட்டத்தில் தடுப்பூசி எதுவும் கையிருப்பு இல்லை. சென்னையிலிருந்து அரசு ஒதுக்கீடு செய்து அனுப்பிய பிறகுதான் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் கேட்டபோது, ராமநாதபுரம் மாவட்டத்தில் அவசர அவசியத்திற்காக 500 தடுப்பூசிகள் வைத்துள்ளோம். அரசின் ஒதுக்கீடு விரைவில் வர உள்ளது. அந்த ஊசிகள் வந்த பின்னர் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். மக்களிடம் தற்போது தடுப்பூசி போட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணம் இன்னும் அதிகரித்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை வரவேண்டும். அதற்கேற்ப ஒதுக்கீடு கேட்டு பெற்று அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.

    இவ்வாறு கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதிக இறப்பை பார்த்து அச்சமடைந்து தற்போதுதான் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தில் தடுப்பூசி முழுவதுமாக தீர்ந்து விட்டதால் தொற்று அதிகரிப்பதோடு பலர் பலியாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. தற்போது மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×