search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சளாறு அணையின் பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறுவதை படத்தில் காணலாம்.
    X
    மஞ்சளாறு அணையின் பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறுவதை படத்தில் காணலாம்.

    55 அடியை எட்டிய மஞ்சளாறு அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரத்து 230 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் மஞ்சளாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இதைத்தொடர்ந்து அணையில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஒரு மாத காலமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு, நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. கடந்த மாதம் 20-ந்தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50 அடியாக இருந்தது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. பொதுவாக மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டும்போது பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

    மேலும் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால், மஞ்சளாறு கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சிவஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 192 கனஅடியாக உள்ளது. அந்த தண்ணீர் அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
    Next Story
    ×