search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நடமாடும் வாகனங்களில் உழவர் சந்தைவிலைக்கு காய்கறிகள், பழங்கள் விற்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி

    நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    கோவை:

    கொரோனா தொற்று பரவலை தடுக்க இன்று முதல் 31-ந் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த முழு ஊரடங்கில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள், பழங்கள் வேளாண் தோட்டக்கலை துறை சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் தலா 10 நடமாடும் வாகனங்கள் என மொத்தம் 50 வாகனங்கள் இயக்கப்பட உள்ளது. இந்த வாகனங்கள் மட்டுமின்றி, கோவை நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், கோவை ஒசூர் சாலையில் உள்ள மத்திய மண்டல அலுவலகம் முன்பு வேளாண் தோட்டக்கலைத்துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 2 வார்டுக்கு ஒரு கிருமிநாசினி தெளிப்பு எந்திரம் என 50 எந்திரங்களையும் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் வழங்க நடமாடும் வாகனங்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உழவர் சந்தையில் எந்த விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் 106 வகையான காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும்.

    வேளாண்மை துறை, உணவுத்துறை, பால் வளத்துறை எல்லாத்துறைகளும் அதிகாரிகளும் முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு வேண்டிய காய்கறிகளை வீடு தேடி சென்று குறைவான விலையில் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.

    கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது மாநகராட்சியில் 50 வாகனங்களில் விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் மாநகராட்சி மூலம் 500 தனியார் வாகனங்களுக்கும் காய்கறி விற்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. காய்கறி விற்பனையை கண்காணிப்பதற்கு என ஒரு நோடல் ஆபிசர் நியமனம் செய்யப்பட உள்ளார். மாவட்டம் முழுவதும் 401 வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தனியாரும் விரும்பினால் வாகனங்களில் காய்கறிகள் விற்க அனுமதி தரப்படும்.

    மேலும், அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் மட்டும் கரும்பூஞ்சை தொற்றுக்கு 21 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், மாவட்ட கலெக்டர் நாகராஜ், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×