search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சிவன்அருள் வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி
    X
    கலெக்டர் சிவன்அருள் வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி

    மடவாளம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து வீடு, வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

    திருப்பத்தூர் அருகே மடவாளம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து கலெக்டர் சிவன்அருள் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பத்தூர் அடுத்த மடவாளம் கிராமத்தில் நேற்று விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

    கலெக்டர் சிவன்அருள் மற்றும் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினர்.

    அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவித பாதிப்பும் இல்லை. உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறி, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு கலெக்டர் விளக்கமளித்தார்.

    பின்னர் கொரோனா தடுப்பூசி போடவேண்டிய பொது மக்களை தங்களுடன் அழைத்து வந்து மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    முகாமில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயசித்ரா, கோமேதகம், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் லோகன் உள்பட பலர் பேசினர். முடிவில் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.

    பின்னர் கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி தேவையான அளவு இருப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 350 படுக்கைகள் கொண்ட வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான அளவு ஆக்சிஜன் இருக்கிறது.

    மாவட்டத்தில் 2 இடங்களில் 200 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 57 ஆயிரத்து 500 பேருக்கும், 2-வது டோஸ் தடுப்பூசி 19 ஆயிரத்து 300 பேருக்கும் போடப்பட்டுள்ளது. விரைவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×