search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  கிரேஸ் - லாசர் - மல்லிகா
  X
  கிரேஸ் - லாசர் - மல்லிகா

  ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த சாலையோர வியாபாரிகள்

  ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி இருப்பதாக கூறும் சாலையோர கடை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் தங்களின் குறையை யாரிடம் சொல்வது என தெரியாமல் தவிப்பதாக வேதனையோடு தெரிவித்தனர்.
  சென்னை:

  கொரோனா நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், இதற்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்று அரசு கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. சாலையோர கடைகள் உள்பட மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

  ஏற்கனவே கொரோனா காரணமாக சாலையோர கடை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், அரசின் இந்த ஊரடங்கால் தற்போது வாழ்வாதாரம் இன்றி இருப்பதாக கதறுகின்றனர். மேலும் தங்களுடைய குறைகளை யாரிடம் சொல்வது? என்று தெரியாமல் தவிப்பதாகவும் வேதனையோடு தெரிவித்தனர்.

  இதுகுறித்து சாலையோர கடை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

  வில்லிவாக்கத்தை சேர்ந்த சாலையோர உணவக கடைக்காரர் கிரேஸ்:- பெரிய ஓட்டல்களில் வசதி படைத்தவர்கள் செல்போனில் இருந்தபடி ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடுகிறார்கள். தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள் சாலையோர கடைகளை தான் தேடி வருவார்கள். ஊரடங்கால் அவர்களுடைய வாழ்வாதாரத்தோடு, அவர்களை நம்பியிருக்கும் எங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டது. காலை 6 மணி முதல் 10 மணிக்குள் கடையை திறந்து மூடிவிட வேண்டும். அதற்குள் என்ன வருமானத்தை நாங்கள் ஈட்டிவிட முடியும்?.

  கொளத்தூரை சேர்ந்த பழக்கடை வியாபாரி லாசர்:- தினமும் சில குறிப்பிட்ட பழ வகைகளை எடுத்து வந்து விற்பனை செய்வேன். இப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், காலை 10 மணிக்குள் பழங்களை விற்பனை செய்ய முடிவதில்லை. இதனால் வாங்கி வந்த பழங்கள் விற்பனையாகாமல் அழுகி, முதலுக்கே மோசமாகி விடுகிறது. இதனால் நஷ்டத்தில் விற்றுவிட்டு செல்கிறேன். போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன்.

  ஓட்டேரியை சேர்ந்த பூக்கடை வியாபாரி மல்லிகா:- கடை போடவே கூடாது என்று சொல்கிறார்கள். நான் 40 ஆண்டுகளாக சாலையோரத்தில் இந்த வியாபாரத்தைத்தான் செய்கிறேன். என்னுடைய கணவர் இறப்புக்கு பிறகு, பூக்கடை மூலமாக தான் என் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிறேன். இப்போது அதற்கும் தடை என்று சொல்லிவிட்டால், நாங்கள் எங்கே போவது?. அரசு எங்களுடைய வாழ்வாதாரத்துக்கு உதவி செய்தால் கோடி புண்ணியமாக இருக்கும். ஒரு பிடி சோறு கொடுத்தால் போதும்.

  சுரேஷ் - ரஞ்சித் - சாரதா - விஜயா

  செங்குன்றத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்:- 2 வாரம் வீட்டில் முடங்கி இருக்க வேண்டும். வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்துவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. காலை 6 மணி முதல் 10 மணிக்குள் ஆட்டோ ஓட்டினால் போலீசார் எதுவும் சொல்வது இல்லை. ஆனால் அந்த நேரத்தில் சவாரி வருமா? என்றால் கேள்விக்குறி தான். அப்படியே சவாரி வந்தாலும், 10 மணிக்குள் வீடு திரும்பும்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டால், ஆட்டோ பறிமுதல் என எங்களுடைய மொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு விடுகிறது. எனவே எங்களுக்கான தொழிலாளர் நலவாரியம் மூலம் இதுபோன்ற ஊரடங்கு காலத்தில் பண உதவி செய்தால், சிரமம் குறையும்.

  கொடுங்கையூரை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ரஞ்சித்:- நான் கடந்த 10 ஆண்டுகளாக மெக்கானிக் வேலை செய்து வருகிறேன். புயல், மழை, வெள்ளக்காலங்களில் தொழில் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாத சூழ்நிலை இருக்கும். தற்போது கண்ணுக்கு தெரியாத கொரோனா எனும் கிருமி எங்களை போன்று தொழிலை நம்பி வாழ்க்கை நடத்துவோரின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கி உள்ளது. தற்போது எங்களுடைய வாழ்க்கை ‘ரிப்பேர்’ ஆன மோட்டார் சைக்கிள் போன்று மாறி இருக்கிறது. கொரோனாவை கண்டு உயிர் பயம் இருந்தாலும், குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற அச்சமே மேலோங்கி இருக்கிறது. எனவே முதல்-அமைச்சர், எங்களை போன்ற தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு நிவாரண தொகை அளிக்க வேண்டும். மெக்கானிக் கடைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும்.

  கிண்டியை சேர்ந்த துணி தேய்க்கும் தொழிலாளி சாரதா:- ஊரடங்கால் சுத்தமாக வேலை இல்லை. கடையையும் திறக்க முடியாமல் அவதிப்படுகிறோம். கடை, வீட்டு வாடகை கொடுக்க வழியில்லாமல் தவிக்கிறோம். துணி தேய்க்க ஏதாவது இருக்கிறதா? என்று வீடுகளில் கேட்டால், வெளியில் எங்காவது போனால் தானே துணி தேய்க்க முடியும் என்று கூறுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த சொல்கிறார்கள். அதற்கு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை. எனவே எங்களுடைய வாழ்வாதாரத்துக்கு கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

  ஆலந்தூரை சேர்ந்த பலகார வியாபாரி விஜயா:- சாலையோரத்தில் பலகாரம் தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். தினமும் குடும்ப செலவுக்கு வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் அந்த வருவாய் இப்போது இல்லை. குறிப்பிட்ட நேரங்களில் கடை வைத்தால் கூட, முன்பு இருந்த அளவுக்கு விற்பனை இல்லை. பலகாரங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்றால் தான் முடியும். இல்லையென்றால், அது குப்பைக்கு தான். எனவே எங்களை போன்ற சாலையோர வியாபாரிகளுக்கு நேரக் கட்டுப்பாட்டில் கூடுதலாக நேரங்களை ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

  இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
  Next Story
  ×