search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை ரெயில் நிலையத்தில் காத்திருந்த வட மாநில தொழிலாளர்களை படத்தில் காணலாம்.
    X
    கோவை ரெயில் நிலையத்தில் காத்திருந்த வட மாநில தொழிலாளர்களை படத்தில் காணலாம்.

    சொந்த ஊருக்கு செல்வதற்காக பல கி.மீ. தூரம் நடந்து ரெயில் நிலையத்திற்கு வந்த வட மாநில தொழிலாளர்கள்

    முழு ஊரடங்கினால் பஸ்கள் இயக்கப்படாததால் சொந்த ஊருக்கு செல்ல கோவை ரெயில் நிலையத்திற்கு வட மாநில தொழிலாளர்கள் பல கி.மீ தூரம் பரிதாபமாக நடந்து வந்தனர்.
    கோவை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று முழு ஊரடங்கால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை.

    இந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக கோவையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவது அதிகரித்து உள்ளது. தற்போது ரெயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் வட மாநில தொழிலாளர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர்.

    முழு ஊரடங்கு காரணமாக நேற்று பஸ்கள் இயக்கப்படாததால், சொந்த ஊருக்கு செல்வதற்காக வடமாநில தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து கோவை ரெயில் நிலையத்திற்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தனர். இதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

    பொள்ளாச்சி, வால்பாறை, சோமனூர் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் இரவே கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கேயே படுத்து தூங்கினர். நேற்று காலை உணவகங்கள் மூடப்பட்டு இருந்ததால் உணவு கிடைக்காமல் அவர்கள் அவதி அடைந்தனர்.

    இது குறித்து வட மாநில தொழிலாளர்கள் கூறியதாவது:-

    இங்கு நாங்கள் 8 மணி நேரம் வேலை செய்தால் குறைந்தபட்சம் ரூ.400 சம்பளமாக கிடைக்கும். ஆனால் எங்கள் ஊரில் நாள் முழுவதும் வேலை செய்தாலும் ரூ.100 தான் கிடைக்கும். கடந்த ஆண்டு கொரோனா அச்சத்திற்கு பின் கடந்த 4 மாதங்களாக தான் பணிபுரிந்தோம். அதற்குள் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு சென்று உள்ளனர். கொரோனா அச்சம் குறைந்ததும் திரும்பி வருவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வடமாநில தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்புவதால் கோவையில் தொழில்துறை பாதிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல் ரெயில்களில் கோவைக்கு வந்த பயணிகளும் தங்களது வீடுகளுக்கு திரும்ப பஸ் மற்றும் ஆட்டோக்கள் இல்லாததால் கடும் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×