search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திருப்பூர் மாவட்டத்தில் தட்டுப்பாடு எதிரொலி : கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று நிறுத்தப்பட்டன.
    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதன் பின்னர் அரசு அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு போடப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி செலுத்த வருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனை மற்றும் மாநகரில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போட பலரும் குவிந்து வந்தனர். முதல் டோஸ் செலுத்தியவர்கள் பலரும் 2-வது டோஸ் செலுத்துவதற்கு ஆர்வம் காட்டி வந்தனர்.

    ஆனால் கொரோனா தடுப்பூசி சென்னை மற்றும் கோவையில் இருந்து அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்கள் பலரும் தடுப்பூசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகிறார்கள். அவர்களை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி போட வருமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவினாசி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முடிவடைந்ததால் கொரோனா தடுப்பூசி அறையும் மூடப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி வரவில்லை. சுகாதாரத்துறை தடுப்பூசி அனுப்பியதும் இந்த தட்டுப்பாடு தீர்ந்துவிடும். தட்டுப்பாடு காரணமாக நேற்று மாநகரில் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நிறுத்தப்பட்டது.

    பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணம். திருப்பூர் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு மட்டுமே கையிருப்பு உள்ளது. கோ வேக்சின் இல்லை. ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைவாக அளவிலேயே தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி வந்ததும் விரைவாக அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    Next Story
    ×