search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ்
    X
    மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ்

    சென்னையில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரிப்பு- மாநகராட்சி கமிஷனர் தகவல்

    சென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட கள அலுவலர்கள் குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சியை பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் வரை 200-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து அடுத்த 45 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகரித்த கொரோனா பாதிப்பு, அதன்பிறகு குறைந்து தற்போது 1,300 முதல் 2 ஆயிரம் வரையிலான தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

    ஒரு மாதத்துக்கு முன்பு வரை சராசரியாக 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு 1,500 என உயர்ந்துள்ளது. அதன் படி 10 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது வீட்டு தனிமையில் அதிகமானோர் இருக்கின்றனர்.
     கொரோனா தடுப்பூசி
    சென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் இன்னும் 12 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிட்டத்தட்ட 3 தெருவுக்கு ஒரு தடுப்பூசி மையம் உள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் யாருக்கும் விளைவுகள் ஏதும் இல்லை. கொரோனா மையத்தை பொருத்தவரை சென்னையில் 5 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.

    இதையடுத்து கூடுதலாக 10 கல்லூரிகளில் கொரோனா மையங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வந்து விடும். அந்தவகையில் கூடுதலாக 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு விடும்.

    தேர்தலினால் மட்டுமே கொரோனா தொற்று பரவியது என கூறமுடியாது. 80 லட்சம் பேர் இருக்கக்கூடிய நகரத்தில் தொற்று பரவ 80 லட்சம் வழிகள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக்கப்பட்டால் தான் பாதிப்பை குறைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×