search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவைக்கு வந்த மோடிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 60 பேர் கைது

    கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் தலைமையில் ஏராளமானோர் பீளமேட்டில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதற்காக இன்று காலை 10.15 மணியளவில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து கோவைக்கு தனி விமானத்தில் வந்தார். அவரை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களது வரவேற்பை ஏற்று கொண்ட பிரதமர், பின்னர் 10.25 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றார்.

    அங்கு கேரளாவில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தை முடித்துக் கொள்ளும் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் பிரசார கூட்டத்திற்கு சென்றார்.

    அங்கு பா.ஜனதா மாநில தலைவர் முருகன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதனை முடித்து கொண்டு கோவை விமான நிலையத்திற்கு 3.25 மணிக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். அதன்பின்னர் ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி மாலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த நிலையில் பிரசாரம் செய்வதற்காக கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் பீளமேட்டில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் கைகளில் பதாகை வைத்திருந்தனர்.

    அதில், இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்ட மோடியே திரும்பி போ என்ற பதாகைகளை ஏந்தியவாறு கோ‌ஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×