search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனம் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனம் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் 2-வது நாளாக அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்டிரைக்

    திருப்பூரில் 2 நாள் போராட்டத்தால் மொத்தம் ரூ.20 கோடி மதிப்பிலான அட்டைப்பெட்டி உற்பத்தி முடங்கியுள்ளது. 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்நிறுவனங்கள் உணவு பொருட்கள், ஆட்டோ மொபைல், ஜவுளி என பல்வேறு துறைகளுக்கு தேவையான வெவ்வேறு வகை அட்டைப்பெட்டிகளை தயாரிக்கின்றன.

    திருப்பூரில், ஆயத்த ஆடைகளை வைப்பதற்கான, அட்டைப்பெட்டி ரகங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. காகிதம், பசை, ஸ்டிச்சிங் காயில் உள்ளிட்டவை அட்டைப்பெட்டி நிறுவனங்களுக்கான மூலப் பொருட்களாக உள்ளன.

    சத்தியமங்கலம், முத்தூர், வெள்ளகோவில் பகுதி காகித ஆலைகளில் இருந்து அட்டைப்பெட்டி தயாரிப்புக்கான ‘கிராப்ட்’ காகிதம் பெறப்படுகிறது. இந்தநிலையில் ஒரு டன் ‘கிராப்ட்’ காகிதம் விலை ரூ.25 ஆயிரமாக இருந்தது.கொரோனாவுக்கு பின் தற்போது ரூ.40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    எனவே மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், தற்போதைய நிலையை தெரிவிக்கும் வகையிலும் நேற்றும் இன்றும் 2 நாட்கள் அட்டை உற்பத்தி நிறுவனங்கள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன.

    இது குறித்து தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    முன்பணம் செலுத்தி, ‘ஆர்டர்’ செய்தாலும், காகித ஆலைகள் போதுமான அளவு கிராப்ட் காகிதம் வழங்குவதில்லை. மொத்த தேவையில், 50 சதவீதத்துக்கும் குறைவாகவே காகிதம் கிடைக்கிறது. பசை, பிரிண்டிங் இங்க் போன்ற இதர மூலப் பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. செலவு அதிகரித்துள்ளதோடு, உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. செலவுக்கேற்ப, அட்டைப்பெட்டிக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

    மத்திய அரசு, கிராப்ட் காகிதம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு, சீரான விலைக்கு தடையின்றி காகிதம் கிடைக்கச் செய்யவேண்டும். 2 நாள் போராட்டத்தால் மொத்தம் ரூ.20 கோடி மதிப்பிலான அட்டைப்பெட்டி உற்பத்தி முடங்கியுள்ளது. 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்றனர்.

    Next Story
    ×