search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கோவை-புதுவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முழு விவரம்

    பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரதமரின் பயண விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரதமரின் பயண விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது.

    வருகிற 25-ந்தேதி காலையில் டெல்லியில் இருந்து காலை 7.45 மணிக்கு விமானத்தில் புறப்படும் மோடி, 10.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    பின்னர் ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்லும் அவர் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். காரைக்காலில் தொடங்கப்பட்டுள்ள ஜிப்மர் கிளையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    பின்னர் புதுவையில் நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.

    இதன்பின்னர் பிற்பகல் 2.10 மணிக்கு புதுவையில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னை திரும்பும் மோடி சென்னை விமானநிலையத்தில் இருந்து கோவை செல்கிறார்.

    அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 3.35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். கார் மூலம் கொடிசியா அரங்கிற்கு செல்கிறார்.

    அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று நெய்வேலி லிக்னைட் நிறுவனம், மத்திய கப்பல் போக்குவரத்து, மின்சாரம், தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை 5 மணியளவில் காரில் கொடிசியா அரங்குக்கு அருகே உள்ள மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு பா.ஜனதா சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி சென்றடைகிறார்.

    பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. கொடிசியா அரங்கு மற்றும் கொடிசியா மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மோடியின் வருகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர். பாதுகாப்பு பணியில் 17 எஸ்.பிக்கள், 38 கூடுதல் எஸ்.பிக்கள், 48 டி.எஸ்.பிக்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமரின் வருகையையொட்டி டெல்லியில் இருந்து குண்டு துளைக்காத கார்கள் வரவழைக்கப்ப்பட்டுள்ளன.
    Next Story
    ×