search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெகமம் அருகே எம்.பி.யின் உறவினர் வீட்டில் வைர, தங்க நகைகள், ரூ.3லட்சம் கொள்ளை - தோட்ட வேலைக்காரர் மீது புகார்

    நெகமம் அருகே எம்.பி.யின் உறவினர் வீட்டில் வைர, தங்க நகைகள், ரூ.3லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தோட்ட வேலைக்காரர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நெகமம்:

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கப்பினி பாளையத்தை சேர்ந்தவர் ராமராஜ்(வயது61). விவசாயி. இவரது மனைவி ஜமுனா(60). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் அ.தி.மு.கவை சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் எம்.பி.யின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் தென்கரை பகுதியை சேர்ந்த சச்சின் என்பவர் இவர்களிடம் வேலை கேட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு வேலை கொடுத்து தோட்டத்தில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்தனர்.

    ராம்ராஜ் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவு செய்தார். இதற்காக நேற்று அதிகாலையிலேயே ராம்ராஜ் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டார்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து பதறிப்போன ராம்ராஜூம், அவரது மனைவி ஜமுனாவும் அலறி அடித்து கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 10 கேரட் வைர நகைகள், 8 பவுன் தங்க நகை, ஒரு ஜோடி கம்மல் ஆகியவை காணாமல் போயிருந்தது. இதை பார்த்ததும் 2 பேரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ராம்ராஜ் தோட்டத்து அறையில் தங்கியிருந்த சச்சினிடம் விபரத்தை கேட்கலாம் என அங்கு சென்றார்.

    அப்போது அந்த அறையில் சச்சினை காணவில்லை. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து ராம்ராஜ் சம்பவம் குறித்து நெகமம் போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்ட போலீசார் ராம்ராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது சில நாட்களுக்கு முன்பு சச்சின் என்பவரை வேலைக்கு சேர்த்ததாகவும், தற்போது அவரையும் காணவில்லை. எனவே அவர் தான் நாங்கள் கோவிலுக்கு சென்ற சமயத்தில் வீட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றிருக்க வாய்ப்புள்ளது என போலீசாரிடம் கூறினார்.

    உடனடியாக போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் மொபட்டில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த எண்ணை வைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நெகமம் பஸ் நிலையத்தில் மொபட் ஒன்று தனியாக நிற்பதாக தகவல் வரவே போலீசார் அங்கு சென்று அதனை கைப்பற்றினர். விசாரணையில் அது மாயமான ராம்ராஜின் மொபட் என்பதும், அவரது வீட்டில் வேலை பார்த்த சச்சின் என்பவர் தான் இங்கு கொண்டு வந்து விட்டு விட்டு பஸ் ஏறி தப்பி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சச்சினை தேடி வருகின்றனர். மேலும் அவரது சொந்த ஊர் தென்காசி என்பதால் அங்கு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதால், அவரை தேடியும் அங்கும் போலீஸ் படை விரைந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×