search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி மருந்துகள்
    X
    கொரோனா தடுப்பூசி மருந்துகள்

    கொரோனா தடுப்பூசி 1-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக போடப்படும்

    வருகிற 1-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 327 ஆக உள்ளது.

    நேற்று மாநில நிலவரப்படி புதிதாக கொரோனா வைரஸ் 509 பேருக்கு பாதித்திருப்பதாக உறுதி செய்யப்பட்டது. நேற்று 531 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

    தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,601 ஆக குறைந்துள்ளது. உயிரிழப்பும் கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது.

    இதன்காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இறங்கு முகமாக மாறி உள்ளது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்படும் பணி கடந்த 16-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    நேற்று வரை தமிழகம் முழுவதும் 97 ஆயிரத்து 176 மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட மிக மிக குறைவாகும். 37.27 சதவீதம் பேர்தான் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    இதுதொடர்பாக இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முன்கள பணியாளர்களில் மருத்துவர்கள், செவிலியர்களில் 6 லட்சம் பேருக்கு முதலில் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 1 லட்சம் பேர்தான் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

    எனவே தடுப்பூசி போடப்படுவதை அதிகரிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் முன் கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசும் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் செய்யப்பட்டு வருகின்றன.

    முன்கள பணியாளர்களில் சுகாதாரத்துறையை போன்று மற்ற துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கும் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். அந்த வகையில் போலீசார், வருவாய்த்துறை, பத்திரிகை துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

    இதுதொடர்பாக தற்போது மற்றத்துறை முன்கள பணியாளர்கள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை மற்ற துறையை சேர்ந்த 3.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்து உள்ளனர். அவர்களில் 1.20 லட்சம் பேர் போலீஸ் துறையை சேர்ந்தவர்கள். 1.20 லட்சம் பேர் வருவாய் துறையை சேர்ந்தவர்கள்.

    சுமார் 1 லட்சம் பேர் மற்ற பிரிவுகளில் இடம்பெற்று உள்ளனர்.

    மூத்த குடிமக்களுக்கும் வருகிற 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மூத்த குடிமக்களும் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    தமிழகத்தில் சுமார் 12 லட்சம் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே தடுப்பூசிகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. இந்த தடுப்பூசிகள் உரிய நேரத்தில் உரியவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதே முக்கியமாகும்.

    தடுப்பூசிகளை பொறுத்தவரை எதிர்பார்த்த இலக்குகளை எட்ட இயலாததால் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 தனியார் மருத்துவமனைகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    150-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட தனியார் மருத்துவமனைகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். பின்னர் மற்ற துறையை சேர்ந்தவர்களும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே சுகாதாரத்துறையை போன்று மற்ற துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களும் இலவசமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.

    தடுப்பூசி போட்டுக்கொள்வது எந்த வகையிலும் கட்டாயம் அல்ல. அவரவர் விருப்பத்தின் பேரில் போட்டுக்கொள்ளலாம். இதன் காரணமாகத்தான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட சற்று குறைவாக உள்ளது.

    பிறதுறை முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும். ஒவ்வொரு துறையினருக்கும் முன்பதிவு செய்வது எப்படி என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    Next Story
    ×