search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் நாளை ஆலோசனை

    அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா? தனித்து போட்டியிடலாமா? என்பது குறித்து 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் நீடிக்குமா? தனித்து போட்டியிடுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. இதுவரை 3 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு முதல் தேர்தலாகும். அந்த தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது.

    விஜயகாந்த் வெற்றிபெற்ற நிலையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுகளை பெற்றனர். 10 சதவீதம் வரையிலான ஓட்டுகள் அந்த கட்சிக்கு கிடைத்தது.

    இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களை பெற்றுக்கொண்டு களம் இறங்கிய தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது.

    இப்படி 2 தேர்தல்களில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி இருந்த தே.மு.தி.க.வுக்கு கடந்த சட்டமன்ற தேர்தல் மட்டுமே சறுக்கலாக அமைந்து இருந்தது. மக்கள்நல கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்ட போதிலும் மக்கள் தே.மு.தி.க.வை ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்தநிலையில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு முக்கியமான தேர்தலாக மாறியுள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை தளர்ந்து காணப்படும் நிலையில் அவரது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தான் இப்போது நீடிக்கிறோம் என்று கூறிவரும் பிரேமலதா தனித்து போட்டியிடவும் தே.மு.தி.க. தயாராகி வருவதாகவும் அடிக்கடி கூறிவருகிறார். கூட்டணி வி‌ஷயத்தில் பா.ம.க.வுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தங்கள் கட்சிக்கு அளிக்கப்படுவது இல்லையே என்கிற மனவருத்தம் தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் நிலவி வருகிறது.

    கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் அ.தி.மு.க. தொடங்க வேண்டும் என்று பிரேமலதா வெளிப்படையாக பேட்டி அளித்த நிலையிலும் அ.தி.மு.க. அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

    இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா? தனித்து போட்டியிடலாமா? என்று முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தே.மு.தி.க. உள்ளது. இது பற்றி ஆலோசிப்பதற்காக 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

    இதுதவிர 76 மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பாளர்களுடனும், மண்டல பொறுப்பாளர்களுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10.45 மணிக்கு கோயம்பேடு தே.மு.தி.க. அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
    Next Story
    ×