search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுங்கச்சாவடியில் உள்ள பூத் கண்ணாடிகள் சாலையில் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    சுங்கச்சாவடியில் உள்ள பூத் கண்ணாடிகள் சாலையில் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

    மதுரவாயலில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு

    மதுரவாயலில் உள்ள சுங்கச்சாவடியை கார் மற்றும் ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பூந்தமல்லி:

    சென்னை மதுரவாயலில் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. நேற்று மாலை கார் மற்றும் ஆட்டோவில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சுங்கச்சாவடியில் உள்ள கட்டணம் வசூலிக்கும் பூத்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.

    இதில் பூத் கண்ணாடிகள் நொறுங்கின. அங்கிருந்த கம்ப்யூட்டர், நாற்காலி உள்ளிட்டவைகளையும் அடித்து உடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினார்கள். இந்த தாக்குதலில் சுங்கச்சாவடியில் உள்ள 4 கண்ணாடி பூத்கள் முற்றிலும் உடைந்து நாசமானது. பின்னர் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    மர்மநபர்கள் அடித்து நொறுக்கியதால் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதில் 3 ஊழியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியின் செங்கல்பட்டு மாவட்டம், சின்னமலை ஒன்றிய தலைவரும், கார் டிரைவருமான தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பாபு (வயது 31) என்பவர் தனது காரில் கோயம்பேடுக்கு சவாரி சென்றுவிட்டு திரும்பி வந்தார்.

    அப்போது வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக அவருக்கும், அங்கிருந்த ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் கட்டணம் செலுத்திவிட்டார்.

    முன்னதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி வைத்து கொண்டு சில மணி நேரம் கழித்து கொடுத்தனர். அப்போது அதில் அவர் வைத்து இருந்த ரூ.4,500 பணத்தை ஊழியர்கள் எடுத்து கொண்டதாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பாபு புகார் அளித்திருந்தார்.

    இதன்காரணமாக அவர், தனது கூட்டாளிகளுடன் வந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினாரா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மர்மநபர்கள், தங்கள் கையில் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியை வைத்து இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக வானகரம் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இலவசமாக அனுமதிக்கப்பட்டன.
    Next Story
    ×