search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    மழை நின்றும் 4 நாட்களாக வடியாத வெள்ளம்- தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலை மறியல்

    தூத்துக்குடி நேதாஜி நகரில் 6-வது மற்றும் 7-வது தெரு பகுதியில் இடுப்பு அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ள நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக அணைகள் நிரம்பி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான இடங்களில் வெள்ளநீர் சூழந்தது.

    குறிப்பாக மாநகராட்சி பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் தீவு போன்று மாறியது. கடந்த 4 நாட்களாக மழை பெய்வது நின்றுவிட்டாலும் மாநகர பகுதியில் இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி, குறிஞ்சி நகர், ரகுமத் நகர், ராம்நகர், அன்னை தெரசாநகர் உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் வீடுகளுக்குள்ளும், வீடுகளை சூழ்ந்தும் தண்ணீர் உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் உள்ளனர்.

    அத்தியாவசிய தேவைகளுக்கு மழைநீரில் தத்தளித்து தான் வெளியே செல்லும் நிலை உள்ளது. சிலர் லாரி டியூப்களில் காற்று நிரப்பி படகாக பயன்படுத்தி செல்கின்றனர். பொருட்களை வாங்க போலீசார் படகு மூலம் பொதுமக்களை அழைத்து செல்கின்றனர்.

    பல நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பிரையண்ட்நகர் பகுதியில் மெயின் ரோட்டில் தண்ணீரை அகற்றினாலும் அங்குள்ள 12 குறுக்கு சாலைகளில் இன்னும் தண்ணீர் சூழந்துள்ளது.

    அங்கு கழிவுநீருடன் மழைநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த தண்ணீரை விரைந்து அகற்ற வேண்டும். அதேபோன்று தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மாநகர பகுதிகளில் தேங்கிய வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டாலும், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடியாமல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    மாநகராட்சி சார்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மூலம் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் வாறுகால் வசதி இல்லாததால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மழை நின்றும் தண்ணீர் வடியாததால் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட முடியாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி நேதாஜி நகரில் 6-வது மற்றும் 7-வது தெரு பகுதியில் இடுப்பு அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ள நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் வெள்ளநீரை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்ததை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×