
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களுக்கு முன்பு எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு காளைகளை பிடித்தனர். இதனை அந்த பகுதியை சேர்ந்த பலர் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.
அப்போது காரிமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளியான சின்னதம்பி (வயது 42) என்பவரும் எருதாட்ட நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எருது முட்டியதில் சின்னதம்பி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சின்னதம்பி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை சின்னதம்பி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து காரி மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.