என் மலர்

  செய்திகள்

  இயேசு அழைக்கிறார் ஜெபக்கூடம்
  X
  இயேசு அழைக்கிறார் ஜெபக்கூடம்

  பிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்தவ மத கூட்டங்களை நடத்தி வருபவர் பால்தினகரன்.

  பிரபல கிறிஸ்தவ மத போதகரான இவர் தமிழகம் முழுவதும் பொது இடங்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும் கிறிஸ்தவ ஜெப கூட்டங்களை நடத்தி அதில் உரையாற்றுவார். அவரது பிரசங்கத்தை கேட்க மக்கள் அதிகளவில் கூடுவார்கள்.

  கோவையில் கல்வி நிறுவனங்களையும் பால் தினகரன் நடத்தி வருகிறார். சென்னையிலும் இவருக்கு சொந்தமாக அலுவலகங்கள், நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

  தமிழகத்தில் மேலும் சில இடங்களிலும் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன.

  சென்னையில் பாரிமுனை, அடையாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள பால் தினகரனின் அலுவலகங்கள், கோவையில் இவர் நடத்தி வரும் காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி உள்பட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

  பால் தினகரனுக்கு சொந்தமாக பல இடங்களில் இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கட்டிடங்களும் அலுவலகங்களும் உள்ளன.

  சென்னை அடையாறில் ‘இயேசு அழைக்கிறார்’ தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

  சென்னை பாரிமுனையில் வடக்கு கடற்கரை ரெயில் நிலையம் எதிரிலும் பெரிய கட்டிடம் உள்ளது. வணிக வளாகம் போல இயங்கி வரும் இந்த கட்டிடம் மற்றும் அடையாறில் உள்ள அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

  பால்தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம் கோவையில் உள்ளது. சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள இங்குதான் அவரது வீடு, அலுவலகம், ஜெபக்கூடம், கல்லூரி மற்றும் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகிறது. காருண்யா பெதஸ்தா என அழைக்கப்படும் இங்கு இன்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதி காரிகள் சென்று சோதனை நடத்தினர்.

  கோவை புலியகுளத்தை அடுத்த அம்மன்குளம் பகுதியில் காருண்யா கிறிஸ்தவ பள்ளி ஒன்று உள்ளது. இங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

  லட்சுமி மில் சந்திப்பில் இயேசு அழைக்கிறார் ஜெபக்கூடம் உள்ளது. இங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அங்கு யாரும் இல்லாததால் சோதனை நடத்தாமல் திரும்பிச் சென்றனர்.

  இன்று நடைபெற்ற வருமான வரி சோதனையில் 250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் 28 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கிய அதிகாரிகள் சோதனை நடைபெற்ற இடங்களில் யாரையும் வெளியில் இருந்து உள்ளே அனுமதிக்கவில்லை.

  சோதனை நடந்த இடங்களில் இருந்த யாரையும் வெளியில் செல்லவும் விடவில்லை. காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள அலுவலகங்கள், வணிக வளாகங்களில் அனைத்து அறைகளையும் திறந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்து ஆய்வு செய்தனர்.

  இயேசு அழைக்கிறார் ஜெப நிறுவனத்தை 1983-ம் ஆண்டு பால் தினகரனின் தந்தை டி.ஜி.எஸ்.தினகரன் தொடங்கினார். 1986-ம் ஆண்டு கோவை காருண்யா பல்கலைக்கழகத்தையும் அவரே தொடங்கினார்.

  தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஜெபக் கூட்டங்களை நடத்திய டி.ஜி.எஸ்.தினகரன் இதன் மூலமே கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த 2008-ம் ஆண்டு டி.ஜி.எஸ்.தினகரன் மரணம் அடைந்த பிறகு தந்தையின் வழியில் பால்தினகரனே நிறுவனங்களையும், கல்வி அமைப்புகளையும் நடத்தி வருகிறார். காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பால் தினகரன் உள்ளார்.

  இவரது நிறுவனங்கள் முறையாக வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை முடிவில்தான் வரி ஏய்ப்பு தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும்.

  பால் தினகரனுக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×