search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் 637 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு- அதிகாரிகள் தகவல்

    சென்னை மாநகருக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் தினசரி 637 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னை மாநகர பகுதி குடிநீர் தேவைக்கு மாதம் ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

    இதுதவிர நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர் வீதம் தினசரி பெறப்பட்டு வருகிறது.

    தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கடந்த கால அனுபவங்களை கொண்டு தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரை முறையாக நடப்பாண்டு முழுவதும் பயன்படுத்த பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் சென்னை மாநகர பகுதிக்கு தினசரி குழாய்கள் மூலம் 651.06 மில்லியன் லிட்டரும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 110.89 மில்லியன் லிட்டரும், லாரிகள் மூலம் 17.87, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் 13.75 உட்பட 793.57 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதுதவிர தொழிற்சாலைகளுக்கு 22.85 மில்லியன் லிட்டர், நகராட்சி பகுதிகளுக்கு மொத்தமாக 14.40 மில்லியன் லிட்டர் வீதம் 830.82 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கொடுங்கையூர், கோயம்பேடு, பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம் ஆகிய 4 கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையங்களில் தினசரி 637 மில்லியன்லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. பரவலாக 500 மில்லியன் லிட்டர் தான் சுத்திகரிப்பது வழக்கம். ஆனால் தற்போது கூடுதலாக குடிநீர் வினியோகிக்கப்படுவதால் கழிவுநீரும் அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகர பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வீராணம் ஏரி 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இதில் தற்போது 875 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. அதாவது 59.73 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. தற்போது 81 மில்லி மீட்டர் என்ற அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஏரிக்கு 771 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதில் இருந்து தற்போது 771 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த ஏரியின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×