
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பணம் பறிப்பிலும் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது.
இதுகுறித்து மாணவி ஒருவர் கொடுத்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் 2 பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்டையில் அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹெரன்பால், பாபு உள்ளிட்ட 3 பேரை கடந்த 5-ந் தேதி கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக நாளை சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மகிளா கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் அவர்கள் 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் இன்னும் பலர் சிக்கலாம் என்பதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்து.