search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    எம்.பி.-எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

    எம்.பி.-எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு முழுமையான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் நீதிமன்றங்களில் முன்னாள், இந்நாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவற்றை உயர்நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


    இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பல்வேறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும், விசாரணை அமர்வுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக அவ்வபோது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 7 முதல் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தினமும் 10 வழக்குகள் வீதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, முகாந்திரமற்ற வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    அதே சமயம் தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள செசன்ஸ் நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக செயல்பட அனுமதி வழங்கப்பட்ட போதிலும், ஏற்கனவே செசன்ஸ் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். 

    மேலும் முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 370 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி இருப்பதாகவும் அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதை பொறுத்து, அது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 

    மேலும் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு முழுமையான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும், விசாரணை முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்குகளின் விசாரணையை ஜனவரி 1 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×