search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி.
    X
    சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி.

    16-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: குமரி கடற்கரை கிராமங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

    சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குமரி மாவட்டத்தில் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    குளச்சல்:

    தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது.

    கடற்கரை கிராமங்களில் ஏராளமானோர் கடல் அலையில் சிக்கி உயிர் இழந்தனர். குமரி மாவட்டத்திலும் பலர் பலியானார்கள். பலியானவர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கொட்டில்பாடு, குளச்சல், கன்னியாகுமரியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கு ஆண்டுதோறும் பலியானவர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 16-வது ஆண்டு நினைவு தினமான இன்று கொட்டில்பாட்டில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். குளச்சல் சுனாமி காலனியில் இருந்து பங்கு தந்தை ராஜு தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு கொட்டில் பாட்டில் 199 மீனவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர்களது குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் தெற்காசிய மீனவர் தோழமையின் பொதுச்செயலாளர் சர்ச்சில் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொட்டில்பாடு புனித அலெக்ஸ் சர்ச்சில் நினைவு திருப்பலி நடந்தது. குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. பங்கு தந்தை மரியசெல்வன் தலைமையில் நடைபெறும்.

    மணக்குடியில் சுனாமி பேரலையில் சிக்கி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பலியானவர்களை அடக்கம் செய்த இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் அமைந்துள்ள நினைவு ஸ்தூபியில் கலெக்டர் அரவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குமரி மாவட்டத்தில் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    நீரோடி முதல் ஆரோக்கிய புரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகள் கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்தது.
    Next Story
    ×