search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி- தமிழக அரசு

    2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர். நிலையான  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல்,  பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.

    ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது  கொரோனா பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.

    • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

    • எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

    • மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப (Total Capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும்  அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை (Thermal Scanning) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

    • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

    • மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. 

    இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×