search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர்-பல்லடம் ரோட்டில் பல வண்ணங்களில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள கோலப்பொடிகளை படத்தில் காணலாம்
    X
    திருப்பூர்-பல்லடம் ரோட்டில் பல வண்ணங்களில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள கோலப்பொடிகளை படத்தில் காணலாம்

    திருப்பூரில் கோலப்பொடி விற்பனை அதிகரிப்பு

    மார்கழி மாதம் தொடங்கியதால் திருப்பூரில் கோலப்பொடி விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பெண்கள் தங்கள் வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டனர்.
    திருப்பூர்:

    மார்கழி மாதம் பெண்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்தை பெண்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த மாதத்தில் இருக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலையில் எழுந்து வீடுகளுக்கு முன்பு கோலமிடுவார்கள்.

    வழக்கமான நாட்களில் மாவு கோலம் வெள்ளை நிறத்தில் வீடுகளுக்கு முன்பு போடுவார்கள். ஆனால் மார்கழி மாதம் முழுவதும் வீடுகளுக்கு முன்பு பல்வேறு வண்ணங்களில் கோலங்கள் போட்டு அசத்துவார்கள். இதற்கு மிக முக்கியமாக வண்ண கோலப்பொடி தேவைப்படுகிறது. இந்த கோலப்பொடிகளை தங்களது கோலத்திற்கு ஏற்ப தாங்கள் விரும்பு வண்ணங்களில் வாங்கி வருவார்கள்.

    தற்போது மார்கழி மாதம் தொடங்கி உள்ளதால், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல பெண்கள் அதிகாலையில் தங்கள் வீடுகளுக்கு முன்பு வண்ண வண்ண கோலமிட்டு அசத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இந்த சீசனை கருத்தில் கொண்டு திருப்பூர் தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் சாலையோர கடைகளில் பலர் வண்ண வண்ண கோலப்பொடிகளை விற்பனை செய்கிறார்கள். இதனை பொதுமக்கள் பலரும் விரும்பி வாங்கி செல்கிறார்கள். மேலும், தள்ளுவண்டிகளிலும் ஆங்காங்கே பலர் கோலப்பொடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விற்பனையும் தற்போது அதிகரித்து வருகிறது. ரூ.5 முதல் ரூ.10 வரை கோலப்பொடி பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெண்கள் பலரும் ஆர்வமாக இதனை வாங்கி கோலமிட்டு வருகிறார்கள்.

    இதுபோல் தற்போது உள்ள இளம்பெண்களில் சிலருக்கு கோலம் போட தெரிவதில்லை. இருப்பினும் இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கோல அச்சுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட வடிவில் அச்சு இருக்கிறது. இந்த அச்சில் நாம் விரும்பும் கோலப்பொடியை போட்டு தேய்த்தால், தரையில் வண்ண நிறத்தில் அந்த அச்சில் இருக்கும் கோலம் வரையப்பட்டு வருகிறது.

    மேலும், புள்ளிவைப்பதற்கு எனவும் அச்சு உள்ளது. இதனையும் இளம்பெண்கள் பலர் உற்சாகமாக வாங்கி சென்று, கோலமிட்டு மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். மார்கழி மாதத்தை தெரியப்படுத்தும் விதமாக மாநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் முன்பு வண்ண வண்ண கோலங்கள் அலங்கரித்து வருகின்றன.
    Next Story
    ×