search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா மினி கிளினிக்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசிய போது எடுத்த படம்.
    X
    அம்மா மினி கிளினிக்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசிய போது எடுத்த படம்.

    சேலம் மாவட்டத்தில் 100 அம்மா மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

    சேலம் மாவட்டத்தில் விரைவில் 100 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சேலம்:

    சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

    ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்னும் 10 நாட்களில் அம்மா மினி கிளினிக் செயல்பட தொடங்கி விடும். சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 34 மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சேலம் மாவட்டம் முழுவதும் 100 அம்மா மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த காலத்தில், கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். அதனை கருத்தில் கொண்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 500 படுக்கை வசதிகள் கொண்ட மகப்பெறு மருத்துவமனையும், அங்கேயே 50 படுக்கை வசதிகளுடன் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டது. இதுதவிர, பல்வேறு நோய்களுக்கு அதிநவீன கருவிகளுடன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டா கனியாக இருந்தது. ஆனால் அதனை உணர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு காரணமாக 313 ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புதிதாக 1,650 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன.

    புதிதாக ஏற்படுத்தப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் அதிநவீன கருவிகள் ஏற்படுத்தி அனைத்து நோய்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 10 மருத்துவக்கல்லூரிகளுக்கு புற்று நோயை கண்டறியும் நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவியும் ரூ.20 கோடி மதிப்பு ஆகும். சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய்களை கண்டறியவும் அதிநவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு மருத்துவ காப்பீட்டில் ரூ.2 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். ஆனால் தற்போது ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டில் சிகிச்சை பெற முடியும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    முன்னதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட கலெக்டர் ராமன் நன்றி கூறினார்.
    Next Story
    ×