search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    24 புதிய தொழில் திட்டங்கள் மூலம் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    சென்னையில் 24 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்து மற்றும் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.24 ஆயிரத்து 458 கோடி தொழில் முதலீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த சில ஆண்டுகளில் தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான ஏற்பாடுகள் காரணமாக தொழில் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்து உள்ளது. அகில இந்திய அளவில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகி உள்ளது.

    தொழில் முதலீடு மற்றும் உற்பத்தியில் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக இருப்பதாக முதலீடுகள் மதிப்பீடு குழு அறிவித்துள்ளது. அதுபோல இந்தியா டுடே நிறுவனமும் இந்தியாவில் தொழில் முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கணித்துள்ளது.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளி மாநில தொழிலதிபர்களுக்கு தங்கு தடையின்றி அனுமதி கொடுக்கப்படுகிறது. ஒரே இடத்தில் எல்லா அனுமதிகளையும் பெற தமிழக அரசு வசதி செய்து கொடுத்துள்ளது. இதன் காரணமாக தொழில் வளர்ச்சி தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் வரை தமிழக தொழில் மேம்பாட்டுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தார். இதன் காரணமாக ரூ.31 ஆயிரத்து 464 கோடிக்கு தொழில் முதலீடு கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

    அதன்தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் 12-ந் தேதி மேலும் 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் காரணமாக ரூ.10 ஆயிரத்து 55 கோடிக்கு முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிப்பதற்காக பல புதிய திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யவும், அடிக்கல் நாட்டவும் மற்றும் தொடங்கி வைப்பதற்கான விழா சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று மதியம் நடைபெற்றது.

    விழாவுக்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு புதிய முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்ய வழிவகுத்தார்.

    ரூ.19 ஆயிரத்து 955 கோடி முதலீட்டில் 26 ஆயிரத்து 509 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. சிப்காட், வல்லல் வடகலில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் தொழிலக வீட்டு வசதி திட்டத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    ரூ.4 ஆயிரத்து 503 கோடி முதலீட்டில் 27 ஆயிரத்து 709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் சில புதிய தொழில் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    அதோடு சிப்காட் தொழிற்பூங்காக்களின் புவியியல் தகவலமைப் பிற்கான (ஜி.ஐ.எஸ்.) புதிய இணையத்தையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் டாரஸ் அகமது, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இன்று நடந்த விழாவில் மொத்தம் 24 திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்து மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.24 ஆயிரத்து 458 கோடி தொழில் முதலீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த தொழில் திட்டங்களால் தமிழகத்தில் 54 ஆயிரத்து 218 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு செய்துள்ள தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று தமிழகத்தில் தொழில் புரட்சி உருவாகச்செய்யும் என்று நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
    Next Story
    ×