search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகள் ரத்து

    மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தாக்கல் செய்திருந்த கிரிமினல் அவதூறு வழக்குகளில், 4 வழக்குகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பதவியில் இருந்த நேரத்தில் கொடநாட்டில் ஓய்வு எடுப்பது குறித்தும், 2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது தொடர்பாகவும், வேறு சில சம்பவங்கள் தொடர்பாகவும், கருத்துகளை தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது கிரிமினல் அவதூறு வழக்குகள் பல சென்னை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் தரப்பில் வக்கீல் பி. குமரேசன் ஆஜராகி வாதிட்டனர்.

    அப்போது நீதிபதி, அரசியல் காரணங்களுக்காக ஏராளமான அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    பின்னர், “இதுபோன்ற அரசியல்ரீதியான வழக்குகளை வாய்தா போடுவதற்கே பெரும்பாலான நேரத்தை கீழ் கோர்ட்டுகள் செலவு செய்ய வேண்டியது வரும். பிற மாநிலங்களில் இதுபோன்ற நிலை இல்லை. அங்குள்ள தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்? தமிழகத்தில் தொடர்ந்து வரும் இந்த கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    மனுதாரர் வக்கீல் குமரேசன், “முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அரசியல் ரீதியான சாதாரண விமர்சனங்களுக்காக அவதூறு வழக்குகள் தாக்கல் செய்ய ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, தவிர்க்க முடியாத காரணத்துக்காக மட்டுமே அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது” என்றார்.

    அதற்கு அரசு குற்றவியல் தலைமை வக்கீல் நடராஜன், “தொடர்ந்து பொய் தகவலை மக்களிடம் பரப்பி கொண்டே இருக்கும்போது, வேறு வழியின்றி தான் இதுபோன்ற அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி என்.சதீஷ்குமார், “இந்த கலாசாரத்திற்கு இருதரப்பினரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆரோக்கியமான விமர்சனம் அரசியலில் எப்போதுமே வரவேற்கப்படுகிறது. பொது வாழ்க்கையில் இருக்கும் தலைவர்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த முறை செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து ஊருக்குள் வெள்ளம் வந்தபோது கடுமையான விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், இந்த முறை அது போன்ற விமர்சனங்கள் இல்லை. தமிழக அரசு கடந்த முறை பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இந்த முறை முன்னெச்சரிக்கையுடன் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாட்டை அனைத்து தரப்பிலும் பாராட்டுகின்றனர்.

    பொதுவாக அரசியல் காரணத்திற்காக தனிப்பட்ட முறையில், பிறர் மனம் புண்படும் வகையில் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தாக்கல் செய்திருந்த கிரிமினல் அவதூறு வழக்குகளில், 4 வழக்குகளை ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 12 அவதூறு வழக்குகளை அடுத்த வாரம் விசாரிப்பதாக கூறினார்.
    Next Story
    ×