search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் தங்களின் உயிரையும் பணயம் வைத்து, இரவு-பகல் பாராமல், தன்னலம் சிறிதுமின்றிப் பணியாற்றிய அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதிய உயர்வுக் கோரிக்கையை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் அலட்சியம் செய்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. மாபெரும் போராட்டத்தை நடத்திய அரசு மருத்துவர்கள், அரசின் வேண்டுகோளை ஏற்று அந்தப் போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்பினர். அவர்களில் 118 பேரின் மாறுதல் உத்தரவை, 8 மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தின் தலையீட்டால் ரத்து செய்த அ.தி.மு.க. அரசு, போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் மீது எடுத்த துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கையை இன்றுவரை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது, உயிர் காக்கும் பணியில் உள்ள மருத்துவர்களின் உயர் மதிப்பைப் புரிந்து கொள்ளாமல், உதாசீனப்படுத்துவதாகும்.

    போராட்டம் முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதி அடிப்படையில் இன்னும் அரசு மருத்துவர்கள் கோரிய ஊதிய உயர்வினை அளிக்கவும் இல்லை. அதுதொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. கொரோனாவில் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து முன்கள வீரர்களாக நின்று, மக்களை காப்பாற்றியவர்கள் இன்னும் காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள் அரசு மருத்துவர்கள். அவர்களில் உயிர்த்தியாகம் செய்தோருக்கு, அரசு அறிவித்த உதவித்தொகையையும் இதுவரை வழங்கவில்லை.

    எத்தனை பேர் கொரோனா பணியில் உயிர் நீத்தார்கள் என்ற கணக்கும் அரசிடம் முறையாகவோ, சரியாகவோ இல்லை. இவ்வளவு சோதனைகளுக்கு இடையில், மக்களைப் பாதுகாக்கும் மாபெரும் பணியில், இடைவிடாது கடமை ஆற்றிவரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையைக் கூட தமிழக அரசு அலட்சியப்படுத்தக்கூடாது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஏழை-எளிய மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை மீண்டும் போராட்டப் பாதைக்குத் தள்ள முயற்சி செய்வது, கேடுபயக்கக் கூடியதாகும்.

    எனவே, அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதிய உயர்வுக் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து 23.10.2009 தேதியிட்ட அரசாணை எண்: 354-ன்படி, தற்போது உள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11, 12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்கும் வகையில் அரசு ஆணை எண் 354-ஐ உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு தமிழக அரசு மருத்துவர்களுக்கும் கிடைத்திடக் காலதாமதமின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பிக்க முன்வரவேண்டும்.

    இதுதவிர, அரசு மருத்துவர்களின் மீதுள்ள துறை நடவடிக்கைகளை ரத்து செய்வது, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கும் முடிவினை எடுத்து நீக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்குவது, முதுநிலை மற்றும் உயர் சிறப்புத் தகுதி மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் மீதும் உடனடியாக அனுதாபத்துடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்-அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அரசு மருத்துவர்களின் கொரோனா காலப் பணிகளை நினைவில் கொள்க. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை, மேலும் தாமதமின்றி நிறைவேற்றிடுக.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மருத்துவர்கள் பெற்று வரும் ஊதியத்தை தமிழ்நாடு அரசும் மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக, தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    போராடிய காலத்தில் அரசுத் தரப்பில் முதல்-அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் அளித்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்துவது மருத்துவர்களை மீண்டும் போராட்டக் களத்திற்கு நெட்டித் தள்ளும் நிர்பந்தச்செயலாகும். இந்தத் தவறான அணுகுமுறையை கைவிட்டு, அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றவேண்டும் என முதல்-அமைச்சரையும், அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
    Next Story
    ×